தூத்துக்குடி வ.உ.சிதம்பரம் கல்லூரியில் 12 ம் வகுப்பு மாணவர்களுக்கு
உன்னால் முடியும் தேர்வு வழிகாட்டுதல் பயிற்சி :
மாணவர்கள் சட்டத்திற்கும், மனசாட்சிக்கும் உட்பட்டு துறையில் சாதிக்க வேண்டும் :
தலைமை உரையில் காவல் உதவி கண்காணிப்பாளர் மருத்துவர். மதன் IPS பேச்சு
வ.உ.சிதம்பரம் கல்லூரியில் வைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவ மாணவியருக்கான “உன்னால் முடியும்” எனும் தேர்வு வழிகாட்டுதல் பயிற்சி 09.10.2025, வியாழக்கிழமை இன்று நடைபெற்றது.

கி. பி. 1951 ஆண்டு அனைவருக்கும் தரமான கல்வியை தர வேண்டும் என்ற உயரிய நோக்கத்துடன் குலபதி ஏ.பி.சி. வீரபாகு அவர்களால் துவங்கப்பட்டு கடந்த 75 ஆண்டுகள் கடந்து கல்வி சேவையாக மட்டுமே வழங்கி வரக்கூடிய வ.உ.சிதம்பரம் கல்லூரியில் பவள விழாவின் ஒரு பகுதியாக, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் மற்றும் தூத்துக்குடி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஆகியோரின் வழிகாட்டுதலில் இந்நிகழ்வு நடைபெற்றது.
இதில் தூத்துக்குடி மாவட்டத்தைச் சார்ந்த ஏறத்தாழ 41 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் இருந்து 640 மாணவ, மாணவியர்கள் பங்கு பெற்று பயனடைந்தனர்.

இதில் +2 அரசு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்களை பெறுவதற்கான வழிகாட்டுதல் பயிற்சியும், மருத்துவக் கனவோடு பயில்கின்ற மாணவ மாணவியருக்கான நீட் மாதிரி தேர்வும் நடைபெற்றது.
துவக்க விழாவில் தலைமை உரையாற்றிய தூத்துக்குடி மாவட்ட உதவி கண்காணிப்பாளர் மருத்துவர். மதன் இ.கா.ப. மாணவ, மாணவியர் தங்களுடைய வாழ்வுக்கு அர்த்தம் சேர்க்கும் வகையில் கல்வி பயில வேண்டும். கல்வி ஒன்று தான் வாழ்வில் உயர்வு அடைவதற்கான வழி அதே நேரத்தில் சட்டத்திற்கும், மனசாட்சிக்கும் உட்பட்டு தங்களுக்கு பிடித்த துறையில் அனைத்து மாணவ மாணவியரும் உயர் சாதனை படைக்க வேண்டும். எல்லோரும் டாக்டர், என்ஜினீயர், ஐஏஎஸ் ஆக வேண்டும் என்று எண்ணணாமல் எல்லோரும் அந்தந்த துறையில் சாதிக்க வேண்டும்.

சமுதாயத்தில் பெரியவன், சிறியவன் என்ற ஏற்றத்தாழ்வு இல்லாமல் சந்தோசமாக இருக்க வேண்டும்.மேலும் தாங்கள் பயன்பெறுவதோடு சமூகமும் பயன்பெற உழைக்க வேண்டும். நான்கு பேருக்கு நல்லது செய்ய வேண்டும். நான்கு பேருக்கு உதவ வேண்டும் என்று குறிப்பிட்டார்.
முன்னதாக நிகழ்வின் ஒருங்கிணைப்பாளர் கணிதத் துறை உதவி பேராசிரியர் முனைவர். ஜாக்சன் வரவேற்புரை நிகழ்த்தினார்.

வ.உ.சிதம்பரம் கல்லூரி முதல்வர் முனைவர். வீரபாகு இந்நிகழ்விற்கு அனுமதி அளித்த தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம், தூத்துக்குடி மாவட்ட பள்ளிக் கல்வித் துறை, மாணவ, மாணவியர்களை நிகழ்வில் பங்கு பெறச் செய்த பள்ளிகளின் தலைமையாசிரியர்கள், மாணவ, மாணவியர்களை நிகழ்வுக்கு அழைத்து வந்த ஆசிரியர் பொறுப்பாளர்கள், மற்றும் மாணவ, மாணவிகளை வாழ்த்திப் பேசினார்.
மேலும் வ. உ. சிதம்பரம் கல்லூரியின் வரலாற்றில் சமூகத்தின் மேம்பாட்டிற்காக மாணவ மாணவிகளின் வளர்ச்சிக்காக என்னென்ன நிகழ்வுகள் நடைபெற்று உள்ளது என்பதை பற்றியும் விளக்கி கூறினார்.
இந்நிகழ்வில் பண்ணிரெண்டாம் வகுப்பை முடித்த மாணவ மாணவியர்கள் தொடர்ந்து கல்லூரி படிப்பை தெரிவு செய்வதற்கான வழிகாட்டுதல் முகாம் நடைபெற உள்ளது என்றும் கூறினார்.

விழாவுக்கான ஏற்பாடுகளை வ. உ.சிதம்பரம் கல்லூரியின் முதல்வர் முனைவர். வீரபாகு தலைமையில் முனைவர்.ஜாக்சன் ஒருங்கிணைப்பில், பேராசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத அலுவலர்கள் செய்திருந்தனர்.




















