பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம் 6 முதல் 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு விரிவாக்கம் விழா : மாணவர்களுடன் உணவருந்தினார் முதல்வர் ஜோசப் விஜய் !

தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 6 முதல் 8ஆம் வகுப்பு வரை பயிலும் நடுநிலைப்பள்ளி மாணவர்களுக்கான ‘பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம்’ விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. இதனை இன்று செப்டம்பர் – 22 – 2026 செவ்வாய்க்கிழமை முதல்வர் விஜய் சென்னை திருவான்மியூர் அரசு நடுநிலைப்பள்ளியில் தொடங்கி வைத்தார்.

சுடச்சுட மாணவர்களுக்கு உணவை பரிமாறிய முதல்வர் ஜோசப் விஜய் அவர்களுக்கு தண்ணீர் வழங்கி மாணவர்களுடன் அமர்ந்து உணவை சாப்பிட்டு மாணவர்களை ரசித்தார்.
பள்ளி வளாகத்தைச் சுற்றிப் பார்த்த அவர், குழந்தைகளின் கல்வி வளர்ச்சிக்கும் சிறப்பான எதிர்காலத்திற்கும் வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

ஏற்கெனவே 1 முதல் 5ஆம் வகுப்பு வரையிலான தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு கடந்த ஸ்டாலின் ஆட்சியில் செயல்படுத்தப்பட்டு வந்த இத்திட்டம், தற்போது நடுநிலைப்பள்ளி மாணவர்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் மாநிலம் முழுவதும் உள்ள 15,910 பள்ளிகளைச் சேர்ந்த சுமார் 15.30 லட்சம் கூடுதல் மாணவர்கள் நேரடியாகப் பயன்பெறுவர்.
இத்திட்ட விரிவாக்கத்திற்காக நடப்பு நிதியாண்டில் ரூ. 217 கோடி கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக முதலமைச்சர் விஜய் பட்டு வேட்டி, சட்டையில் வந்திருந்தார்.
இன்று காலை உணவு திட்டத்தில் மாணவ, மாணவிகளுக்கு சர்க்கரைப் பொங்கல், வெண் பொங்கல், சாம்பார் காலை உணவாக வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள் அமைச்சர்கள் ஆனந்த், ஆதவ் அர்ஜூன், ஜெகதீஸ்வரி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
மாணவர்களின் வருகைப் பதிவை உயர்த்தவும் ஊட்டச்சத்துக் குறைபாட்டைப் போக்கவும் கொண்டு வரப்பட்ட இத்திட்டம் பெற்றோர் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. முதல்கட்டமாக செவ்வாய்க்கிழமை மாணவர்களுக்கு வெண் பொங்கல், சாம்பார், சர்க்கரைப் பொங்கல் வழங்கப்பட்டது.
முன்னதாக இத்திட்டத்தின் விரிவாக்கம் குறித்துப் பெற்றோர்களின் கைப்பேசி எண்களுக்குத் தமிழக அரசு சார்பில் சிறப்பு அறிவிப்பு குறித்த குறுந்தகவலும் அனுப்பப்பட்டது.













