தமிழ்நாடு அரசின் MSME துறை புதிய அறிவிப்புகளுக்கு THUDITSSIA வரவேற்பு :

தமிழ்நாடு அரசின் MSME துறை புதிய அறிவிப்புகளுக்கு THUDITSSIA வரவேற்பு :

இது குறித்து,தூத்துக்குடி மாவட்ட சிறு,குறு  மற்றும் நடுத்தர தொழில் சங்க பொதுச்செயலாளர் ராஜ் செல்வின் அளித்த நன்றி அறிவிப்பு.

தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய், குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் மதன் ராஜா ஆகியோருக்கு 2026–27ஆம் ஆண்டிற்கான புதிய MSME அறிவிப்புகளை வெளியிட்டதற்காக THUDITSSIA சார்பில் நன்றியையும் வரவேற்பையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

தொழில் வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையிலும், MSME நிறுவனங்களின் நிதி, தொழில்நுட்பம், உள்கட்டமைப்பு மற்றும் சந்தை வாய்ப்புகளை மேம்படுத்தும் வகையிலும் இந்த அறிவிப்புகள் அமைந்துள்ளன. பாரம்பரிய தொழில்களில் ஈடுபடும் கைவினைஞர்களை தொழில் முனைவோர்களாக உருவாக்கும் வகையில் ‘VKKT’ திட்டத்தின் கீழ் 50% மானியத்துடன் ரூ.10 லட்சம் வரை உதவி வழங்கப்பட உள்ளது.
நிலுவையில் உள்ள முதலீட்டு மானிய விண்ணப்பங்களை விரைந்து வழங்குவதற்காக ரூ.600 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் நீண்டகாலமாக மானியத்திற்காக காத்திருக்கும் தொழில் நிறுவனங்களுக்கு நிதிச்சுமை குறையும்.

MSME நிறுவனங்கள் AI, Industrial IoT மற்றும் Sensors போன்ற நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்த முதலீட்டு மானியத்தில் முன்னுரிமை வழங்கப்பட உள்ளது.
மின்சார வாகனங்களுக்கான (EV) உதிரிபாகங்கள் உற்பத்தியில் ஈடுபடும் புதிய குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் மற்றும் ஏற்கனவே செயல்பட்டு வரும் தொழில் நிறுவனங்கள், EV உதிரிபாக உற்பத்தியில் ஈடுபடுவதற்கு முதலீட்டு மானியத் திட்டத்தின் கீழ் முன்னுரிமை அடிப்படையில் மானியம் வழங்கப்பட உள்ளது. இதற்காக ரூ.20 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

குறு உற்பத்தி நிறுவனங்களின் Margin Money தேவையை பூர்த்தி செய்யும் வகையில் ரூ.100 கோடி மதிப்பிலான திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சிறு உற்பத்தி நிறுவனங்கள் தங்களது தொழில் திட்டங்களை செயல்படுத்த நிதி ஆதாரம் கிடைக்கும்.

தூத்துக்குடி மாவட்டம் சங்கரப்பேரியில் 10 ஏக்கர் பரப்பளவில் மகளிர் தொழிற்பேட்டை அமைக்க ரூ.3.70 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தூத்துக்குடி மாவட்டத்தில் பெண் தொழில்முனைவோர்களுக்கு புதிய தொழில் வாய்ப்புகள் உருவாகும்.

SIDCO தொழிற்பேட்டை மனைகளை பெற்றுள்ள தொழில் முனைவோர்களுக்கு தொழில் தொடங்குவதற்கான கால அவகாசம் 2 ஆண்டுகளில் இருந்து 3 ஆண்டுகளாகவும், மனைகளுக்கான முழுத் தொகையை செலுத்துவதற்கான கால அவகாசம் 6 மாதங்களில் இருந்து 9 மாதங்களாகவும் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தொழில் முனைவோர்களின் நிதிச்சுமை குறைந்து, தொழில் தொடங்குவதற்கான கூடுதல் அவகாசம் கிடைக்கும்.

1,000 புதிய தொழில் முனைவோர்களை உருவாக்கும் வகையில் ஆறு புதிய திட்டங்கள் EDII-TN மூலம் செயல்படுத்தப்பட உள்ளன. இதில் Blue Economy, Circular Economy, Tourism, Farm-to-Market உள்ளிட்ட துறைகள் இடம்பெற்றிருப்பது புதிய தொழில் வாய்ப்புகளை உருவாக்கும்.
தொடக்கநிலை தொழில்நுட்ப நிறுவனங்களுக்கான Start Smart Seed Fund ரூ.15 லட்சத்தில் இருந்து ரூ.25 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.

தொழில் நிறுவனங்களின் தற்போதைய தேவைகளுக்கு ஏற்ப புதிய MSME கொள்கை உருவாக்கப்பட உள்ளது. இதில் தொழில்நுட்ப மேம்பாடு, Industry 4.0, Automation மற்றும் Artificial Intelligence ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட உள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் முத்தூர் தொழிற்பேட்டையில் தற்போது வேளாண் மின் தட வசதி மட்டுமே உள்ள நிலையில், தொழில் மின் தட வசதி ஏற்படுத்தப்பட உள்ளது. இதன் மூலம் முத்தூர் தொழிற்பேட்டையில் செயல்பட்டு வரும் தொழில் நிறுவனங்களுக்கு தேவையான தொழில் மின்சார வசதி கிடைக்கும்.

EDII-TN மூலம் செயல்படுத்தப்படும் ஓராண்டு சான்றிதழ் கல்வியில் பயிலும் 50 மாணவர்களுக்கு, ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் கல்விக் கட்டண மானியம் வழங்கப்பட உள்ளது.

அறிவுசார் சொத்துரிமை (IPR), புவிசார் குறியீடு (GI) மற்றும் ஒரு மாவட்டம் ஒரு தயாரிப்பு (ODOP) தொடர்பான விழிப்புணர்வு மற்றும் கண்காட்சி நிகழ்வுகள் நடத்தப்பட உள்ளன. இதன் மூலம் MSME தயாரிப்புகளின் அறிவுசார் சொத்துரிமை பாதுகாப்பு, பிராண்டிங் மற்றும் மதிப்பு கூட்டுதலுக்கு வாய்ப்பு ஏற்படும்.

தமிழ்நாடு அரசின் இந்த புதிய அறிவிப்புகள் MSME துறையின் வளர்ச்சிக்கு மேலும் வலுசேர்க்கும் வகையில் அமைந்துள்ளதுடன், தொழில் நிறுவனங்களின் வளர்ச்சி மற்றும் புதிய தொழில் வாய்ப்புகளை ஊக்குவிக்கும் வகையில் அமைந்துள்ளன. தொழில் நிறுவனங்களின் தற்போதைய தேவைகளை கருத்தில் கொண்டு பல்வேறு புதிய முயற்சிகள் அறிவிக்கப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது.

தமிழ்நாடு அரசின் MSME துறை வெளியிட்டுள்ள இந்த அனைத்து புதிய அறிவிப்புகளையும் THUDITSSIA சார்பில் வரவேற்கிறோம் என்று பொதுச்செயலாளர் ராஜ் செல்வின் தெரிவித்தார்.