தூத்துக்குடி கீதா ஜீவன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு இளங்கலை மற்றும் முதுகலை மாணவர்களுக்கான தொடக்க விழா நிகழ்ச்சி நடைபெற்றது!
தூத்துக்குடி கீதா ஜீவன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 2026 – 2027 ம் கல்வி ஆண்டிற்கான முதலாம் ஆண்டு இளங்கலை மற்றும் முதுகலை மாணவர்களுக்கான தொடக்க விழா 15.06.2026 அன்று காலை 10.00 மணியளவில் கல்லூரி கருத்தரங்க அரங்கில், கல்லூரிச் செயலர் ஜீவன் ஜேக்கப் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் கல்லூரி நிர்வாக அறக்கட்டளை உறுப்பினர்களான டாக்டர்.மகிழ் ஜான் சந்தோஷ், எம்.எஸ். (எலும்பியல்), மற்றும் திருமதி சுதா சுதன் ஆகியோரும் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.

விழா தமிழ்த்தாய் வாழ்த்து மற்றும் கல்லூரி இறை வணக்கப் பாடலுடன் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து கல்லூரி முதல்வர் முனைவர்.இளங்குமரன் வரவேற்புரை வழங்கினார். அவர் தனது உரையில் பள்ளிக் கல்விக்கும் உயர்கல்விக்கும் இடையேயான வேறுபாடுகளை மாணவர்களுக்கு விளக்கினார். மேலும், மாணவர்கள் அனைத்து வேலை நாட்களிலும் தவறாமல் கல்லூரிக்கு வருகை புரிந்து, கல்வியில் சிறந்து விளங்க வேண்டும் என்று ஊக்கமளித்தார்.

விழாவின் தொடக்க உரையை சிறப்பு விருந்தினரான முன்னாள் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன் வழங்கினார்.
அவர் தனது உரையில் உயர்கல்வியில் கிடைக்கும் வாய்ப்புகளை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளுமாறு மாணவர்களை ஊக்குவித்தார். இளங்கலைப் பட்டத்துடன் கல்வியை நிறுத்தாமல், உயர்கல்வி, தொழில்முறை படிப்புகள், ஆராய்ச்சித் திட்டங்கள் மற்றும் திறன் மேம்பாட்டுப் பயிற்சிகளில் ஈடுபட்டு தங்களது தொழில் வாய்ப்புகளை மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினார்.

மேலும், தொடர்ச்சியான கற்றல், சுயஒழுக்கம், கடின உழைப்பு மற்றும் தன்னம்பிக்கை ஆகியவை வாழ்க்கையில் தனிப்பட்ட மற்றும் தொழில்முறை வெற்றியைப் பெறுவதற்கான அடிப்படை அம்சங்கள் என எடுத்துரைத்தார்.
தலைமைத்துவப் பண்புகள், தகவல் தொடர்புத் திறன் மற்றும் சமூகப் பொறுப்புணர்வை வளர்த்துக் கொண்டு, சிறந்த குடிமக்களாகவும் நாட்டின் எதிர்கால தலைவர்களாகவும் திகழ வேண்டும் என்று மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினார். அவரது ஊக்கமூட்டும் உரை மாணவர்களை உயர் கல்வி இலக்குகளை நிர்ணயித்து, தாங்கள் தேர்ந்தெடுத்த துறைகளில் சிறந்து விளங்கத் தூண்டுவதாக அமைந்தது.

அதனைத் தொடர்ந்து, தமிழ்த்துறை உதவிப் பேராசிரியரும் துறைத் தலைவருமான முனைவர்.செல்லக்கனி கல்லூரியின் வருகைப் பதிவுமுறையை (Attendance System) விளக்கினார்.
பின்னர், கணிதத்துறை உதவிப் பேராசிரியரும் துறைத் தலைவருமான மாலதி அகமதிப்பீட்டுத் தேர்வுகள் (Internal Assessment Tests) மற்றும் மதிப்பெண் வழங்கும் முறைகள் குறித்து மாணவர்களுக்கு விரிவாக எடுத்துரைத்தார்.

அதனைத் தொடர்ந்து, வரலாற்றுத்துறை உதவிப் பேராசிரியரும் துறைத் தலைவருமான முனைவர்.பேச்சிமுத்து கல்லூரியின் ஒழுங்குமுறைகள் மற்றும் விதிமுறைகள் குறித்து விளக்கமளித்தார்.
இந்நிகழ்வைத் தொடர்ந்து நடைபெற்ற பெற்றோர் சந்திப்பு நிகழ்ச்சியில், கல்லூரி முதல்வர் முனைவர்.இளங்குமரன் பருவக் கட்டணத்தை (Semester Fee) செலுத்தும் முறை குறித்து விளக்கினார். மேலும், கல்லூரிக் கட்டணம் மற்றும் தேர்வுக் கட்டணம் தனித்தனியானவை என்பதைத் தெளிவுபடுத்தினார். அகமதிப்பீட்டு மதிப்பெண் முறை, கல்லூரி பேருந்து வசதி மற்றும் பேருந்துக் கட்டணம் தொடர்பான தகவல்களையும் பெற்றோர்களுக்கு எடுத்துரைத்தார்.

பெற்றோர்கள் ஒவ்வொரு பருவத்திலும் குறைந்தது இரண்டு முறை வகுப்பு ஆசிரியர்களையும் துறை தலைவர்களையும் சந்தித்து மாணவர்களின் கல்வி முன்னேற்றம் குறித்து அறிந்து கொள்ள வேண்டும் என வலியுறுத்தினார்.
பின்னர், அனைத்து துறைத் தலைவர்கள், நூலகர், உடற்கல்வி இயக்குநர் மற்றும் வேலைவாய்ப்பு அலுவலர் ஆகியோரை பெற்றோர்களுக்கு அறிமுகப்படுத்தினார்.
நிறைவாக, ஆங்கிலத்துறை உதவிப் பேராசிரியர் கிருஷ்ண பிரியா நன்றியுரை வழங்கினார். தேசிய கீதம் இசைக்கப்பட்டு தொடக்க விழா நிறைவுற்றது.













