தூய மரியன்னை கல்லூரி சார்பில் தூத்துக்குடி மாப்பிள்ளையூரணியில் “நெகிழி இல்லா எதிர்காலம்” நிகழ்ச்சி
தூய மரியன்னை (தன்னாட்சி) கல்லூரி, தாவரவியல் துறை சார்பில் சமூக மேம்பாட்டு திட்டம் மற்றும் உன்னத் பாரத் அபியான் திட்டத்தின் ஒரு பகுதியாக “நெகிழி இல்லா எதிர்காலம்” என்ற தலைப்பில் மாப்பிள்ளையூரணி பஞ்சாயத்தில் சிறப்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் மாப்பிள்ளையூரணி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் நடுநிலைப் பள்ளி மாணவர்கள் மற்றும் துப்புரவு பணியாளர்கள் சிறப்பு பார்வையாளர்களாக கலந்து கொண்டனர். தாவரவியல் துறை இளங்கலை இரண்டாம் ஆண்டு மாணவி ராகவி, “நெகிழி இல்லா வாழ்க்கை” குறித்து சிறப்புரை ஆற்றினார். தொடர்ந்து, பிளாஸ்டிக் பயன்படுத்தும் பழக்கத்தை குறைத்து, இயற்கையை பாதுகாக்கும் அவசியத்தை வலியுறுத்தும் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. மாணவர்களுக்கு வினாடி வினா போட்டி நடத்தப்பட்டு, வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

மேலும், நெகிழி பயன்பாட்டைத் தவிர்க்கவும், இயற்கை சார்ந்த பொருட்களைப் பயன்படுத்தவும் ஊக்குவிக்கும் வகையில் ஊர்வலமும் நடத்தப்பட்டது. சுமார் 40 பேர் பயனடைந்தனர்.
பல மாணவர்கள் தங்கள் வாழ்க்கை முறையில் மாற்றம் கொண்டுவர உறுதியளித்தனர். இந்நிகழ்ச்சி தாவரவியல் துறை உதவிப் பேராசிரியர்கள் முனைவர் டயானா லோபோ மற்றும் முனைவர் பாலின் ஜெனிபர் தலைமையில் நடத்தப்பட்டது.














